அண்ணனை தள்ளிவிட்டு தாலி கட்டிய தம்பி

Loading...

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவருக்கு ராஜேஷ், ரஞ்சித், வினோத் என்று 3 மகன்கள் உள்ளனர். இதில் ராஜேஷும், வினோத்தும் திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

மூத்த மகன் ராஜேஷுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விருதுநகரை சேர்ந்த பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். திருப்பத்தூர் இலவம்பாடி வெண்கல் குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

இதற்காக, நேற்று முன்தினம் இரவு மணமக்கள் அழைப்பு நடந்தது. பின்னர், நேற்று காலை கோவிலில் மணமேடை அமைத்து அங்கு திருமண சடங்குகள் நடந்தன. திருமணத்திற்காக வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணபந்தலில் அமர்ந்திருந்தனர். சுப முகூர்த்தம் நெருங்கியது.


முகூர்த்த நேரம் வந்ததும், மணமகன் ராஜேஷ் கையில் தாலி தரப்பட்டது. மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றபோது, பின்னால் நின்றிருந்த அவரது தம்பி வினோத், திடீரென அண்ணன் ராஜேஷை தள்ளி விட்டு, கையில் மறைத்து வைத்திருந்த மற்றொரு தாலியை எடுத்து மணப்பெண் கழுத்தில் கட்டினார். உறவினர்கள் அவரை பிடித்து இழுத்தும், அடித்தும் பார்த்தனர். ஆனால், முரட்டுத்தனமான நடவடிக்கையால் வினோத் தாலி கட்டியதை யாராலும் தடுக்க முடியவில்லை.


இதை சற்றும் எதிர் பார்க்காத உறவினர்கள் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர். மணமகனின் தம்பி தாலி கட்டியபோதும், மணமகள் மறுப்பேதும் கூறாமல் அமைதி காத்தார். சந்தேகமடைந்த உறவினர்கள், வினோத்தையும், மணமகளையும் அடித்து உதைத்து அவர்களிடம் விசாரித்தனர்.


ராஜேஷிக்கு பெண் பார்க்க சென்றபோது, அவரது தம்பி வினோத்தும் உடன் சென்றார். தன்னை பெண் கேட்டு வந்தது, ராஜேஷ் என்பதை முதலில் அறியாமல், அவரது தம்பி தான் மாப்பிள்ளை என்று மணமகள் நினைத்துள்ளார். பார்த்த முதல் பார்வையே, வினோத் மீது காதல் வயப்பட்டார்.


பிறகு, ராஜேஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிய வந்ததையடுத்து மணமகள், தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடம் கூற முடியாமல் தவித்தார். நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதையடுத்து, வினோத்திடம் ரகசியமாய் தனது காதலை கூறினார். வினோத்தும், அண்ணனுக்கு நிச்சயித்த பெண் என்பதை கொஞ்சமும் நினைக்காமல் காதலில் விழுந்தார். செல்போனில் காதல் வளர்ந்தது. எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப்பில் அவர்கள் தொடர்பில் இருந்தனர். முகூர்ந்த நேரம் வரட்டும் என்று வினோத் கூறியிருந்ததால் மணமகள் எந்த படபடப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார். வினோத் காலை முதல் முகூர்த்த நேரம் வரை மணமேடையையே சுற்றி வந்துள்ளார். இருவரும் சேர்ந்து ரகசியமாய் காதலை வளர்த்து, இந்த அதிரடி திட்டத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

இந்த காதலை முன்கூட்டியே சொல்லாமல் அசிங்கப்படுத்தி விட்டீர்களே? என ஆத்திரமடைந்த உறவினர்கள், மணமகளையும் அவருக்கு தாலி கட்டிய வினோத்தையும் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இருவீட்டு உறவினர்களும், அடி, உதையை ஆசிர்வாதமாக வழங்கி விட்டு சாப்பிடாமலேயே புறப்பட்டு சென்றனர்.

இன்னும் சில நொடிகளில் புது வாழ்வு தொடங்க போகிறது என்று ஆசையில் இருந்த ராஜேஷின் தலையில் தம்பியின் செயல் இடி விழ செய்தது. மணமகன் கோலத்தில் இருந்த அண்ணன் ராஜேஷ், விரக்தியடைந்து தான் அணிந்திருந்த வேட்டி, சட்டையை கிழித்து கோபத்தில் வீசி விட்டு கண்ணீர் விட்டு புறப்பட்டு சென்றார்.

அண்ணனுக்கு நிச்சயித்த பெண்ணை, மணமுடித்த வினோத்தை பெண் வீட்டார் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, விருந்திற்காக புது தம்பதியினர் விருதுநகர் அழைத்து செல்லப்பட்டனர். ஆனாலும், வினோத்தை அவரது பெற்றோர் வீட்டு பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்தனர். இதனால் திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.